சுதந்திரத்தின் சூத்திரம் ஆடையில்லை
அம்மி அருந்ததி இன்னும் சிலரின்
சாட்சியோடு சுயம் இழக்கிறோம்
துணை ஆகும் முதல் நொடி வரை
இது தெரியாமல் போவது தான் பெரும் ஆச்சர்யம்
”ஒருவருக்கொருவர்” விட்டு கொடுத்தால் என்பது பொதுமொழி
என்றாலும் ”ஒருவருக்காக ஒருத்தி” என்பதே இதன் உண்மை மொழி
என்பதறிவோம் பின்பு,
பிரச்சனைகள் ஏதும் வராது
மறுப்புகள் ஒன்று வரும் வரை,
வேலைக்கு போக கூட அனுமதி உண்டு
ஆனால் அதன் முன்னும் பின்னுமான பணிகள்
எல்லாம் நமதென்பதை தெரிந்து கொண்டு,
விவாதங்கள், சண்டைகள் என எவற்றிற்கும் வேலை இருக்காது
வழிமொழிதல் மட்டும் நம் வேலை என்றிருந்தால்,
வலிகள் இருந்த போதும் கால்கள் கடுக்க பயணிப்போம்
உங்கள் பாதையிலே நாங்கள்,
உங்களின் அதிப்தி களைய
பெயரில் தொடங்கி எண்ணங்கள், அடையாளங்கள் அத்தனையும் தொலைக்கிறோம் ஒன்றன்பின் ஒன்றாய்,
எங்களுக்கு இப்போது கொஞ்சம் புரிகிறது
சுதந்திரத்தின் சூத்திரம் ஆடையில்லை என்பது!
Comments
Post a Comment