மீனு, மீனு பாப்பாவாக!
அதிகாலையிலேயே எழுந்து விடுவாள் மீனு குட்டி,
பணிகள் ஏதுமில்லை என்றாலும் பரபரப்பாயிருப்பாள் நாள் முழுதும்,
காலை உணவூட்ட தேடி பார்க்கையில் தலை துவட்டிய துண்டை தோளின் குறுக்கே அணிந்து
என்னைபோலே என்றெண்ணி சொப்புகளுடன் சமையல் செய்வாள் மீனம்மா,
மீனுவின் அம்மா மீனம்மா என்ற விளக்கம் சொல்லி இப்படி தான் அழைப்பான் எங்கள் கீழ் வீடு பையன்,
பள்ளி கிளம்பும் அவசரத்தில் அவள் அண்ணன் கழட்டி எறிந்த சட்டையை முழங்கால் வரை அணிந்து அவனுக்கு அண்ணனாகியிருப்பாள் அதன் பிறகு,
மடித்த துணிகளை அடுக்க அலமாரி திறக்கையில் அங்கிருக்கும் பிறந்தநாள் கிரீடம் தரித்து இளவரசி ஆகியிருப்பாள் அந்த நொடி,
இல்லம் திரும்பிய அவள் அப்பாவின் கண்ணாடி, அடையாள அட்டையை மாட்டி கொண்டு,
அப்பாவென சொல்லி திரிவாள் அவளாகவே,
தலை வலி தைல புட்டிகளை கொண்டு நெஞ்சில் வைத்து சோதித்து டாக்டரம்மா வேடமும் போட்டு கலைப்பாள்,
எத்தனை யோசித்தும் பிள்ளைகள் விருப்பங்களின் உளவியல் மட்டும் புரிபடவே மாட்டேன் என்கிறது,
அடுப்படி வேலைகளை முடித்து இப்போது மீனு என்னவாகி இருப்பாள் என்ற ஆவல் மேலிட வந்தால்,
பொம்மைகளை அணைத்தபடி உறங்கி இருப்பாள் மீனு, மீனு பாப்பாவாக!
Comments
Post a Comment