மீனுவின் மியாவும் ஜூ ஜூவும்...
பழுப்பு நிறக் கண்களோடு , பயிற்சிகள் ஏதுமின்றி
மதில் மேல் நடக்கும் பூனைகளைக் கண்டால்
மீனு குட்டிக்கு எப்போதும் மிரட்சிதான் .
அதிலும்
இரவில் ஜன்னல் இடுக்கினுள் உடல் தளர்த்தி நுழையும்
சாதுர்யம் பார்த்து அலறி அழுவாள் !
சாப்பிட அடம் பிடிக்கும் பொழுதுகளிலெல்லாம்
மியாவ் என்றால் மறுப்புகளின்றி
நம் வேலை எளிதாய் முடியும்
இதன் எதிர் மறையாய் ,
ஜூ ஜூ என்று சொன்ன மாத்திரத்தில் ,
எத்தனை அழுகையிலிருந்தும் மீண்டு
விடுவாள் மீனு பாப்பா!
ஈன்று பத்தே நாளான எதிர் வீட்டு நாய்குட்டிகள் மீது
அவளுக்கு சொல்லத் தெரியா பிரியம்.
நடக்கப் பழகியிராத குட்டிகளை தூக்கும் போதெல்லாம்
எங்கிருந்தோ வந்து விடுகிறது
அவளுள் ஒரு தாயின் மாண்பு !
நழுவி இறங்கும் குட்டிகளை மீட்டெடுத்து
தோளில் கிடத்தும் அழகில்,
உலகம் சில நொடி அப்படியே நின்றால் என்ன வென்று தோன்றும் !
அவள் உலகு அணு தினமும் மியாவும், ஜூ ஜுவும் இன்றி நகர்வதேயில்லை .
அலுவல் நிமித்தமாய் நகரின்
அடுக்கு மாடி குடியிருப்புக்கு புலம் பெயர்ந்த பிறகு
இப்போதும் அவள் உலகில்
பூனை களும் ஜூ ஜூ களும் உலவி கொண்டு தான் இருக்கின்றன .
இன்னும் எத்தனை நாள் என்று தெரியாது
எதிர் வீட்டில் இருப்பவரின் முகம் அறியாமல்
வாழும் இங்கு ,
மீனுவைக் காண
பூனை களும் ஜூ ஜூ களும் வர வாய்ப்பில்லை என்று
அவள் தெரிந்து கொள்ள !
Comments
Post a Comment